ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கன்னி.
27-10-2019- துலாம்.
29-10-2019- விருச்சிகம்.
31-10-2019- தனுசு.
கிரக பாதசாரம்:
சூரியன்: சுவாதி- 1, 2, 3.
செவ்வாய்: அஸ்தம்- 3, 4, சித்திரை- 1.
புதன்: சுவாதி- 3, 2, 1.
குரு: கேட்டை- 4, மூலம்- 1.
சுக்கிரன்: விசாகம்- 3, 4, அனுஷம்- 1.
சனி: பூராடம்- 1.
ராகு: திருவாதிரை- 3.
கேது: பூராடம்- 1.
கிரக மாற்றம்:
28-10-2019- தனுசு குரு.
29-10-2019- விருச்சிக சுக்கிரன்.
புதன் வக்ரம், அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
இதுவரை 8-ல் இருக்கும் குரு இப்போது 9-ஆம் இடமான தனுசு ராசிக்கு மாறுகிறார். அங்கு ஆட்சிபலம் பெறுகிறார். பொதுவாக குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள்தான் யோகமான இடங்கள். அதிலும் இயற்கையில் சுபகிரகமான குருவுக்கு 5, 9 என்ற திரிகோண ஸ்தானங் களில் 9-ஆம் இடமே ராஜயோகமான இடமாகும்! "அகப்பட்டவனுக்கு அட்டமத் தில் சனி; ஓடிப்போனவனுக்கு 9-ஆம் இடத்தில் குரு' என்பது ஜோதிட விதி! ஜென்ம ராசியை குரு 9-ல் ஆட்சிபெற்றுப் பார்ப்பதால், இழந்த செல்வாக்கும், பதவியும், கௌரவமும், அந்தஸ்தும் மீண்டும் தேடிவரும். மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள்மீது சுமத்தப்பட்ட வீண்பழியும், களங்கமும் மாறும். உங்களைப் பார்த்து ஏளனமாக எள்ளி நகையாடியவர்களும், நீங்கள் ஒழிந்துவிட்டதாகவோ ஓய்ந்துவிட்ட தாகவோ கருதியவர்களும் ஆச்சரியப்படும் அளவுக்கு உங்களுக்கு வளர்ச்சியும் முன்னேற்ற மும் அமையும். 3-ஆமிடத்துக்கு 7-ல் வரும் குரு 3-ஆமிடத்தைப் பார்ப்பதால், உடன்பிறந்த சகோதர- சகோதரிகளின் வகையில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். உதவி, ஒத்தாசை, ஒற்றுமை, உடன்பாடு மேலோங்கும். குரு 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால் புத்திர யோகம், புத்திரரால் மகிழ்ச்சி, மனநிறைவு முதலி−ய நற்பலன்களை எதிர்பார்க்கலாம்! பூர்வீகச் சொத்து, பங்கு பாகப்பிரிவினைகள் எல்லாம் தங்குதடையின்றி உங்கள் விருப்பம்போல் நிறைவேறும்! தாய்மாமன்வகையில் நிலவும் மனக்கசப்புகள் விலகி இனி மையாகும்.
அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு: உற்சாகம் உருவெடுக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். தொழில் சிறக்கும். பிரச்சினைகள் மறையும்.
பரிகாரம்: திருப்பரங்குன்றத்தில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதியை யும், சோமப்பா சுவா மிகளின் ஜீவசமாதியை யும் வழிபடவேண்டும்.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு: சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்பட்டாலும் முன்னேற்றமான பெயர்ச்சியாக அமையும். பதவி உயர்வு, தொழில் உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம் பட்டியில் ஜோதிநிர்வாண மௌனகுரு சுவாமிகளின் ஜீவசமாதியை வழிபடவும்.
கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு: பரிபூரண நலனைத்தரும். எங்கும் வெற்றி; எதிலும் வெற்றி. ராஜகாரியங்களில் வெற்றி; எல்லாமே வெற்றி. எதிர்பாராத லாபமும் யோகமும் அமையும்.
பரிகாரம்: திருச்சி- துறையூர் பாதையில் திருவெள்ளறையில் சிவப்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதி சென்று வழிபடவும். கார்த்திகை மாதக் கடைசி திங்கட்கிழமை குருபூஜை நடக்கும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
கடந்த ஒரு வருடகாலமாக ரிஷப ராசிக்கு 7-ல் இருந்த குரு இப்போது 8-ஆம் இடத்துக்கு மாறியுள்ளார். 7-ஆம் இடத்தைவிட 8-ஆமிடம் விபத்து, கண்டம், அபகீர்த்தி, அவமானம், கௌரவப் போராட்டம், மலையேறி வீழ்தல், சஞ்சலம், விரக்தி, ஏமாற்றம், இழப்பு ஆகியவற்றைக் குறிப்பதால்- குரு சுபகிரகம் எங்கிருக்கிறாரோ அந்த இடத்துப் பலன்களை அதிகரிப்பார். நல்ல இடத்தில் இருந்தால் நல்லபலனையும், கெட்ட இடத்தில் இருந்தால் கெட்ட பலனையும் அதிகமாகச் செயல்படுத்துவார். 8-ல் உள்ள குரு 12-ஆமிடத்தையும், 2-ஆமிடத்தையும், 4-ஆமிடத்தையும் பார்க்கிறார். 12-ஆமிடம் பயணம், வெளியூர்வாசம், அயன சயன போக ஸ்தானம். விரயம், செலவு, மாற்றம் ஆகியவற்றைக் குறிக்கும் 8-க்குடையவர் 8-ல் மறைவது நல்லது. கெடுதலும் அதுவே- நல்லதும் அதுவே! எப்போது கெடுதல் நல்லதாக மாறும்- எப்போது நல்லது கெடுதலாக மாறும் என்பது அவரவர் ஜாதகவிதியைப் பொருத்தது. 12-ஆமிடத்தை குரு பார்ப்பதால் அவசியமான, தவிர்க்கமுடியாத விரயச் செலவுகளைத் தந்தாலும், 2-ஆமிடத்தையும் பார்ப்பதால் அந்த செலவுகளை சமாளிக்கும் வகையில் தன வருமானமும் உண்டாகும். குரு 11-க்குடையவர். அவர் 8-ல் ஆட்சிபலம் பெறுவதால் எதிர்பாராத நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் தர வாய்ப்புண்டு. ரோஜாவைப் பறிக்கும்போது விர−ல் லேசாக முள் குத்துவதுபோல 8-க்குடைய கெடுபலன்கள் நடந்தாலும், தாங்கிக்கொள்ளும் அளவு லேசாகத்தான் இருக்குமேதவிர, கடுமையாக- கொடுமையாக இருக்காது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு: இந்த குருப்பெயர்ச்சி பரிபூரண நலனைத் தரும். எங்கும் வெற்றி. எதிலும் வெற்றி; ராஜகாரியங்கள் யாவும் வெற்றியாக அமையும்.
பரிகாரம்: திருச்சி- துறையூர் பாதையில் திருவெள்ளறையில் சிவப்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதி சென்று வழிபடவும். கார்த்திகை மாதக் கடைசி திங்கட்கிழமை சிறப்பாக குருபூஜை நடக்கும்.
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு: குருப்பெயர்ச்சி பொருளாதார நிறைவை உருவாக்கும். கடனை வாங்கிக் கடனைக் கொடுத்த அவலநிலை மாறி, தனவரவும் லாபமும் பெருகி சேமிப்பு ஏற்படும்.
பரிகாரம்: சிங்கம்புணரியில் முத்துவடுக சித்தர் கோவில் (வாத்தியார் கோவில்) ஜீவசமா திக்குச் சென்று வழிபடவும். அமாவாசையில் காலை 11.00 மணிக்கும், பௌர்ணமியன்று இரவு 11.00 மணிக்கும் அபிஷேக பூஜை நடக்கும்.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு: தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும். பிரிந்திருக்கும் குடும்பம் இணைந்து இன்பமடையலாம். தாம்பத்திய அன்யோன்யம் உண்டாகும்.
பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேய ரையும், ஸ்வயம்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதியையும் வழிபடலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருக்கும் குரு இப்போது 7-ஆம் இடமான தனுசுக்கு மாறுகிறார். தனுசு, குருவின் சொந்த வீடு. அங்கு ஆட்சிபெறுகிறார். 7-ஆமிடம் குருவுக்கு மிக நல்ல இடம். 6-ஆமிடத்துக் கெடுதல் களை எல்லாம் களைந்துவிடுவார். 7-ஆம் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியையும், 5-ஆம் பார்வையாக 11-ஆமிடத்தையும், 9-ஆம் பார்வையாக 3-ஆமிடத்தையும் பார்க்கிறார். 7-ல் வரும் குரு திருமணமாகாதவர்களுக்குத் திருமணயோகத்தைத் தருவார். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையை அதிகரிக்கச் செய்வார். குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால், இழந்த செல்வாக்கு, கௌரவம், மதிப்பு, மரியாதை ஆகியவற்றைத் திரும்பப் பெறலாம். அந்தஸ்து உயரும். 3-ஆமிடத்தைப் பார்ப்பதால், சகோதர- சகோதரிவகையில் நிலவும் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும். பங்காளிப்பகை தீரும். சச்சரவுகளும் விலகும். தொழில்துறையில் நீங்கள் எடுத்த புதுமுயற்சிகளை தன்னம் பிக்கையோடும் தைரியத்தோடும் கையாளலாம். 11-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தோல்விக்கு இடமில்லாத வகையில் வெற்றி களைத் தருவார். தொழி−ல் லாபமும் உண்டாகும்.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு: தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். குடும்பம் ஒன்றுசேரும்.
பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரையும், ஸ்வயம்பிரகாச சுவாமியின் ஜீவசமாதியையும் வழிபடவும்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு: இதுவரை புயலை சந்தித்துத் தயங்கியவர்கள் இனி பயம் மாறி, தென்றலை சுகித்து இன்பமடையலாம்.
பரிகாரம்: காரைக்குடி அருகில் கோட்டையூர் சென்று எச்சில் பொறுக்கி சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.
புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு: நீண்டகாலமாக நிலவும் இடத்துப் பிரச்சினைக் குத் தீர்வு ஏற்படும். பங்குபாகப் பிரிவினை சுமுகமாக நடைபெறும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் சேங்காலி−புரம் சென்று தத்தாத்ரேயரையும், ராமானந்தர் ஜீவசமாதியையும் வழிபடவும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ல் இருக்கும் குரு இப்போது 6-ஆமிடத்துக்கு மாறுகிறார். அங்கு அவர் ஆட்சியாக அமர்கிறார். 6-ல் வரும் குரு 10-ஆமிடம், 12-ஆமிடம், 2-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் முன்னேற்றம், வேலை யோகம், உத்தியோக வாய்ப்பு உண்டாகும். தொழில்துறையில் சீர்திருத்தங்களும், யோகங்களும், முன்னேற்றகரமான திருப்பங்களும் ஏற்படும். 12-ஆமிடத்தை குரு பார்ப்பதால் வெளிநாட்டு யோகம் அமையும். ஏற்கெனவே படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியின் பலனாக நல்ல சம்பாத்தியம், வேலை அமையும். சிலர் பெற்றோரைப் பிரிந்து வெளியூர் அல்லது வெளிமாநிலம் போகலாம். 2-ஆமிடம் வித்தை, தனம், வாக்கு ஸ்தானமாகும். 2-ஆமிடத்துக்குத் திரிகோணம் பெற்று (குரு 5-ல் நின்று) 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், படிப்பு, வித்தை ஆகியவற்றில் ஆர்வம், அக்கறையோடு செயல்பட்டு முன்னேறலாம். முதலி−டமும் பெறலாம். தனவருமானம் பெருகும். குடும்பச் சூழ்நிலையில் அமைதியும் ஆனந்தமும் ஏற்படும்.
புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு: நீண்டகாலமாக நிலவும் இடத்துப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். பங்குபாகப் பிரிவினை சுமுகமாக நடைபெறும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் சேங்காலி−புரம் சென்று தத்தாத்ரேயரையும், ராமானந்தர் ஜீவசமாதியையும் வழிபடவும்.
பூச சட்சத்திரக்காரர்களுக்கு: இன்பமும் துன்பமும், நல்லதும் கெட்டதும் கலந்து நடக்கும். நெல்லிக்காய் முதலில் துவர்க்கும்; பிறகு இனிக்கும். அதுபோல!
பரிகாரம்: திருநெல்வேலி−- பாளையங் கோட்டை அருகில் வல்லநாடு சென்று சாது சிதம்பரசுவாமிகளின் ஜீவசமாதியை வழிபடவும்.
ஆயில்ய நட்சத்திக்காரர்களுக்கு: அலைச்சலும் பயணமும் இருந்தாலும் அதில் பயனும் பலனும் உண்டு. நன்மையும் லாபமும் கிடைக்கும்.
பரிகாரம்: பொன்னமராவதி அருகில் பனையப்பட்டியில் சாதுப் புல்லான் சுவாமியின் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் இருக்கும் விருச்சிக குரு, இப்போது தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு மாறி ஆட்சிபெறுகிறார். தனுசு குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும். 5-ஆமிடத்து குரு பிள்ளைகள்வகையில் நல்லவற்றைத் தரும். மாறுதலையும், தேறுதலையும், ஆறுதலையும் தரும். திட்டம், எண்ணம் எல்லாம் நிறைவேறும். தனுசு குரு ஜென்ம ராசியையும், 9-ஆமிடத்தையும், 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். உங்களுடைய செல்வாக்கு, திறமை, செயல்பாடு, கௌரவம், புகழ், கீர்த்தி, ஆற்றல் எல்லாம் சிறப்பாக விளங்கும். 5-ல் சனி- கேது இருந்தாலும், குரு அங்கு மாறி ராசியைப் பார்ப்பதால் சோதனைகளை சாதனைகளாக மாற்றலாம். 9-ஆமிடத்தைப் பார்க்கும் குரு பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்கம், விவகாரம் ஆகியவற்றிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பார். தகப் பனார்வழியிலுள்ள கருத்து வேறுபாடுகள் விலகும். 11-ஆமிடத்தை குரு பார்க்கிறார். செய்தொழிலி−ல் லாபம் உண்டாகும். மூத்த சகோதர- சகோதரி வகையில் நன்மையும் ஆதாயமும் உண்டாகும்.
மக நட்சத்திரக்காரர்களுக்கு: 5-ல் வரும் குரு உங்கள் கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவார். கடினமான காரியங்களையும் எளிமையாக ஈடேற்றலாம்.
பரிகாரம்: கும்பகோணம்- ஆடுதுறை அருகில் கோவிந்தாபுரத்தில் ஸ்ரீ போதேந்திராள் அதிஷ்டானம் சென்று வழிபடவும்.
பூர நட்சத்திரக்காரர்களுக்கு: புதிய தொழில் முயற்சி கைகூடும். வேலை இல்லாதோருக்கு வேலைவாய்ப்பும், வேலையில் உள்ளோருக்கு பதவி உயர்வும், வாழ்க்கை முன்னேற்றமும் உண்டாகும்.
பரிகாரம்: கரூர் அருகில் நெரூரில் சதாசிவப் பிரம்மேந்திராள் ஜீவசமாதியை வழிபடவும்.
உத்திர நட்சத்திரக் காரர்களுக்கு: கௌரவம், புகழ், கீர்த்தி, அந்தஸ்து, செல்வாக்கு உயரும் காலம். பட்டமும் பதவியும் தேடிவரும்.
பரிகாரம்: திண்டுக்கல் மலைக் கோட்டை பின்புறம் ஓதசுவாமிகள் (சுப்பையா சுவாமிகள்) ஜீவசமாதி சென்று வழிபடவும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
இதுவரை 3-ல் இருக்கும் குரு இப்போது 4-ஆமிடத்துக்கு மாறுகிறார். 4-ல் ஆட்சிபெறும் குரு சொந்தவீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு அல்லது மனை யோகத்தைத் தரும். 4-ஆமிடத்து குரு 8-ஆமிடத்தையும், 10-ஆமிடத்தையும், 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார். தனுசு குரு 9-ஆமிடத்துக்கு 8-ல் மறைந்து, ராசிக்கு 8-ஆமிடத்தையே (மேஷம்) பார்ப்பதால் தகப்பனார் அல்லது பாட்டனார் வகை சொத்துப் பிரச்சினைகள் சிலருக்குத் தலைவலி−யாக அமையும். 10-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தொழில்துறையிலும், வேலையிலும் முன்னேற்றமும் லாபமும் உண்டாக்குவார். 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு சிலருக்கு வெளிநாட்டு வேலை யோகத்தை ஏற்படுத்தலாம். சிலர் ஒரு கம்பெனியிலி−ருந்து வேறொரு கம்பெனிக்கு மாறலாம். அது நல்ல மாற்றமாகவும் அமையும். குடும்பத்தில் சுபவிரயச் செலவுகளை சந்திக்கும் சூழல் அமையும்.
உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு: 4-க்குடையவர் 4-ல் ஆட்சிபெறும் காலம் தாயன்பும், வாகன யோகமும், பூமி, வீடு, மனை யோகமும் அமையும். திருமணமா காதவர்களுக்குத் திருமண யோகமும் அமையும். புதிய தொழில் யோகமும், தொழில் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஓதசுவாமிகள் (சுப்பையா சுவாமிகள்) ஜீவசமாதி சென்று வழிபடவும்.
அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு: தவிர்க்கமுடியாத செலவினங்களைச் சந்திக்க நேர்ந்தாலும், அவை பயனுள்ள செலவாக அமையும். சிலர் தொழில்வகையில், சிலர் புதிய மனை, வீடு, வாகன வகையில் சுபமுதலீடு செய்யலாம்; கடனும் அமையும்.
பரிகாரம்: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேஷாத்திரி சுவாமிகள் ஜீவசமாதி, ரமணர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு: ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் சோதனைகளை சாதனைகளாக மாற்றலாம்.
பரிகாரம்: மதுரை திருப்பரங்குன்றம் இன்ஜினீயரிங் கல்லூரிப் பாதையில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு 2-ல் இருக்கும் குரு இப்போது 3-ஆமிடத்துக்கு மாறுகிறார். அங்கு அவர் ஆட்சிபெறு கிறார். தைரியம், தன்னம்பிக்கை மலரும். சகோதர சகாயம் உண்டாகும். நண்பர்களால் நன்மையும் ஏற்படும். 3-ஆமிடத்து குரு 7-ஆமிடத்தையும், 9-ஆமிடத்தையும், 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். கணவன்- மனைவிக்குள் சலசலப்பு மாறி கலகலப்பும், ஒற்றுமையும், அன்யோன்யமும் உண்டாகும். திருமணம் தடைப்பட்ட ஆண்- பெண்களுக்குத் திருமண பாக்கியம் வந்துசேரும். குலதெய்வ அனுகூலமும், தெய்வப் பிரார்த்தனைகளும் நிறைவேறும். 9-ல் நிற்கும் ராகுவும் அவரைப் பார்க்கும் கேதுவும் ஆன்மிக வழிபாடுகளை அதிகப்படுத்துவர். தொழில் வகையில் இருக்கும் கடன்கள் மாறி லாபமும் முன்னேற்றமும் உருவாகும். காரிய ஜெயம் ஏற்படும்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு: 4-க்குடைய குரு 4-ல் ஆட்சிபெறுவதால் நன்மையே நடக்கும். என்றாலும் சனி, கேது- ராகு சம்பந்தம் கிடைப்பதால், இடையிடையே தடைகளும் உருவாகி குழப்பத்தை ஏற்படுத்தலாம். விடாமுயற்சியும் வைராக்கியமும் இருந்தால் சோதனையை வெல்லலாம்.
பரிகாரம்: மதுரை திருப்பரங்குன்றம் இன்ஜினீயரிங் கல்லூரிப் பாதையில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு: குலதெய்வ வழிபாடும், பூஜையும் சிறப்பாக அமையும். முன்னோர் சொத்துகளில் பரிவர்த்தனை செய்து பலன் அடையலாம்.
பரிகாரம்: இராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் சக்கரைக்கோட்டை கண்மாய் அருகிலுள்ள ராஜகோபால சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.
விசாக நட்சத்திரக்காரர்களுக்கு: கடனை வாங்கி கடனை அடைக்கும் நிலை காணப்பட்டாலும், வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். பொருளாதாரத்தில் சரிவு இல்லையென்றாலும் கடனும் வட்டியும் அதிகமாகும்.
பரிகாரம்: பொள்ளாச்சி அருகில் புரவிபாளையம் சென்று கோடீஸ்வரசாமி ஜீவசமாதியை வழிபடவும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
உங்கள் ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருக்கும் குரு இப்போது தன ஸ்தானமான- 2-ஆமிடமான தன் சொந்த வீட்டுக்கு ஆட்சியாக மாறுகிறார். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆமிடங்கள் யோகமான இடங்கள். தனம், குடும்பம், வித்தை ஆகிய சிறப்புகளைத் தருவார். 2-ல் உள்ள குரு 6-ஆமிடத்தையும், 8-ஆமிடத்தையும், 10-ஆமிடத்தையும் பார்க்கிறார். வீடு கட்ட, வாகனம் வாங்க, கல்விக்காக, கல்யாணம் காட்சி நடத்த, தொழில் ஆரம்பிக்க ஆகியவற்றுக்காக கடன் வாங்கலாம். வாக னத்தில் கவனமுடன் நடந்துகொள்வதும் அவசியம். சில இடையூறுகளையும், சிறு விபத்துகளையும் சந்திக்கநேரலாம். திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகலாம். தொழில், பதவி, உத்தியோகம், வேலை ஆகியவற்றில் முன்னேற்றமும் விருத்தியும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு பதவி உயர்வும் ஏற்படலாம். விசாக நட்சத்திரக்காரர்களுக்கு: கடனை வாங்கிக் கடனை அடைக்கும் நிலை காணப் பட்டாலும் வாக்கு நாணயம் காப்பாற்றப் படும். பொருளாதாரத்தில் சரிவு இல்லை யென்றாலும் கடனும் வட்டியும் அதிகமாகும்.
பரிகாரம்: பொள்ளாச்சி அருகில் புரவிபாளையம் சென்று கோடீஸ்வரசாமி ஜீவசமாதியை வழிபடவும்.
அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு: ஏழரைச்சனியின் கடைசிக்கூறு என்றாலும், அனுஷம் சனியின் சாரம் என்பதால் பாதிக்காது. சில காரியம் உடனுக்குடன் நிறைவேறும். சில காரியம் தடைப்பட்டு, தாமதப்பட்டு நிறைவேறும். எப்படியோ எல்லாம் ப்ளஸ் பாயின்டுதான்; மைனஸ் இல்லை.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருவிசநல்லூர் சென்று ஸ்ரீதர அய்யாவாள் வாழ்ந்த இடத்தையும், கங்கை நீர் பெருகிய கிணற்றையும் வழிபடவும்.
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு: குருப்பெயர்ச்சி தொடக்கத்தில் மத்திமப் பலனாகச் செய்தாலும், போகப்போக பிற்பகுதியில் ஆதாயத்தையும் அனுகூலத்தை யும் தரும்.
பரிகாரம்: திருவாரூர் மடப்புரம் சென்று தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும். ஆவணி மாதம் குருபூஜை நடைபெறும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 12-ல் இருந்து தன் சொந்த வீடான தனுசுவுக்கு இப்போது மாறி ஆட்சிபெறுகிறார். ஜென்ம குரு சிக்கலை உண்டாக்கும் என்று சொல்லமுடியாது. தனுசு, குருவின் சொந்த வீடு. ஆட்சி. எனவே குரு நன்மைகளைச் செய்வார் என்று நம்பலாம். 5-ஆமிடத்தையும், 7-ஆமிடத்தையும், 9-ஆமிடத்தையும் தனுசு குரு பார்க்கிறார். திருமணமாகி நீண்டகாலமாக வாரிசு இல்லையென்று கவலைப்பட்ட தம்பதிகளுக்கு வாரிசு யோகம் உண்டாகும். வாரிசு உள்ளவர்களுக்கு அவர்களால் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். எண்ணம், திட்டம் எல்லாம் செயல்வடிவம் பெறும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் பெருமைகள் ஏற்படும். சிலர் மனைவி பெயரில் புதிய தொழில் திட்டம் தொடங்கலாம். குரு உபதேசம், ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவம் ஆகியவற்றில் நாட்டம் ஏற்படும். குலதெய்வ அருளும் கிடைக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு: குரு, சனி, கேது மூவரும் ஜென்ம ராசியில் சம்பந்தம் என்பதால், மொத்தத்தில் "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று மனநிறைவைப் பெறலாம். அவசர மான பயணத்தின்போது வேகத்தடை வேகத்தைத் தடுப்பதுபோல குறுக்கீடுகளைக் கடக்கவேண்டும்.
பரிகாரம்: கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சென்று ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரை வழிபடவும்.
பூராட நட்சத்திரக்காரர்களுக்கு: பொருளாதாரத்தில் வளர்ச்சியும் திருப்தியும் காணப்படும். சிலருக்கு உடல்நலக்குறைவு, சிலருக்கு மனநலக்குறைவு ஏற்படலாம். எனினும் பாதிக்காது.
பரிகாரம்: புதுக்கோட்டை புவனேஸ் வரி ஆலயத்தில் ஜட்ஜ் சுவாமிகளின் ஜீவசமாதியை வழிபடவும்.
உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு: உங்களது விடாமுயற்சிக்கும், விசுவாசத்துக்கும் தக்க நன்மைகளையும் பலன்களையும் பெறலாம். குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும்.
பரிகாரம்: பழனியில் பா−டெக்னிக் பின்புறம் ஈசுவரபட்டா சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். ரசமணிச் சித்தர்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு 11-ல் இருக்கும் குரு இப்போது 12-ஆமிடமான விரயஸ்தானத்துக்கு மாறுகிறார். 12-ல் வந்திருக்கும் குரு 5-ஆம் பார்வையாக மகர ராசிக்கு 4-ஆமிடம் மேஷத்தையும், 7-ஆம் பார்வையாக 6-ஆமிடம் மிதுனத்தை யும், 9-ஆம் பார்வையாக 8-ஆமிடம் சிம்மத்தையும் பார்க்கிறார். 4-ஆமிடத்துக்கு திரிகோணத்தில் 9-ல் நின்று 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் பூமி, வீடு, வாகன சம்பந்தமான சுபச்செலவுகள் உண்டாகும். தேக சுகத்தில் தெளிவு ஏற்படும். மேற்படிப்பு சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். மேற்கண்ட வீடு சம்பந்தமாகவும், கல்வி சம்பந்தமாகவும் கடன்கள் அமையும். தொழில்துறையில் போட்டி, பொறாமையும் இருக்கத்தான் செய்யும். 8-ஆமிடத்தைப் பார்க்கும் பலனாக விபத்து, கண்டம், அபகீர்த்தி, திடீர் அதிர்ஷ்டம் போன்ற பலன்களும் நடக்கலாம். உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு: உங்களுடைய விடாமுயற்சிக்கும் விசுவாசத்துக்கும் தக்க நன்மைகளையும் பலன்களையும் பெறலாம். குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும். தேகநலத்தில் அக்கறை அவசியம்.
பரிகாரம்: பழனி பாலிடெக்னிக் பின்புறம் ஈசுவரபட்டா ஜீவசமாதி சென்று வழிபடவும். ரசமணிச் சித்தர்.
திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு: திருமணத்தடை விலகும். தொழில்துறையில் நிலவும் தொய்வுகள் அகலும். விரோதிகளின் வீண்விமர்சனங்களும் தொல்லைகளும் விலகும். எடுத்த காரியங்கள் எளிதாகப் பலன் தரும்.
பரிகாரம்: சங்கரன்கோவில்- கரிவலம்வந்தநல்லூர் அருகில் பனையூர் ஒடுக்கம் என்ற ஊரில் சங்கரநாராயணர், தட்சிணாமூர்த்தி ஜீவசமாதி திகழ்கிறது. சென்று வழிபடவும்.
அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு: கட்டட சீர்திருத்த வேலை, புதிய ஒப்பந்தங்கள், ரியல் எஸ்டேட், அக்னி சம்பந்தமான தொழில்கள், உணவு விடுதிகள் போன்றவை மேன்மையாக இயங்கும்.
பரிகாரம்: சேலம் சூரமங்கலத்தில் புதுச்சேரி அப்பா பைத்தியம்சுவாமி என்ற சித்தர் ஜீவசமாதியாக இருந்து அருள்பாலிக்கிறார். சென்று வழிபடவும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ல் இருக்கும் குரு இப்போது 11-ஆமிடமான சொந்த வீடு தனுசுவுக்கு மாறி ஆட்சியா கிறார். ஏற்கெனவே கூறியதுபோல குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆமிடங்கள் நல்ல இடங்கள். தனுசு குரு 3-ஆமிடத்தையும், 5-ஆமிடத்தையும், 7-ஆமிடத்தையும் பார்க்கிறார். சகோதரவகையில் நன்மையும் ஆதாயமும் உண்டாகும். சகாயமும், உதவி ஒத்தாசையும், ஒத்துழைப்பும் ஏற்படும். தைரியமும் தன்னம்பிக்கையும் பெருகும். குரு 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். புத்திர காரகன் புத்திர ஸ்தானத்தைப் பார்க்கிறார். 5-ல் ராகு நிற்கும் தோஷத்தை விலக்கும். நியாயமான ஆசைகள் நிறைவேறும். திட்டங்கள் வெற்றியடையும். நீண்டகாலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். ஜாதகரீதியாக நாக தோஷம், செவ்வாய், சனி தோஷம், களஸ்திர தோஷமிருந்தால் திருமணம் தாமதப்படும்.
அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு: சிலருக்கு புதுவீடு மாறும் யோகமும், சிலருக்கு வேறு ஊர் மாறும் யோகமும் அமையும். சிலர் வேலை தேடி வெளிநாடு போகலாம்.
பரிகாரம்: சேலம் சூரமங்கலத்தில் புதுச்சேரி அப்பா பைத்தியம் சுவாமி என்ற சித்தர் ஜீவசமாதியாக இருந்து அருள்பாலிக்கிறார். வழிபடவும்.
சதய நட்சத்திரக்காரர்களுக்கு: மலைபோல வரும் பிரச்சினைகள் எல்லாம் பனிபோல விலகியோடிப்போகும். பொருளாதாரத்தில் வளர்ச்சியும் முன்னேற்ற மும் உண்டாகும். நினைத்தவை நிறை வேறும். கருதியவை கைகூடும்.
பரிகாரம்: திருவண்ணாமலையில் விசிறி சாமியார் என்ற ராம் சுரத்குமார் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு: விருந்தினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சொந்தபந்தங்களின் சந்திப்பும் சகாயமும் மனதுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் அமையும்.
பரிகாரம்: மதுரை- திருப்பரங் குன்றத்தில் இன்ஜினீயரிங் கல்லூரிப் பாதையில் சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். ஒவ்வொரு பூரட்டாதியிலும் சிறப்புப் பூஜை நடை பெறும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் இருக்கும் குரு இப்போது 10-ஆமிடமான தனுசு ராசிக்கு ஆட்சியாக மாறுகிறார். 10-ல் வந்துள்ள தனுசு குரு 2-ஆமிடத்தை யும், 4-ஆமிடத்தையும் 6-ஆமிடத்தை யும் பார்க்கிறார். 2-ஆமிடம், வாக்கு, தனம், குடும்பம், வித்தை, பார்வை ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அந்த 2-ஆமிடத்துக்கு 9-ல் திரிகோணம் பெற்று 2-ஆமிடத்தையே பார்ப்பதால் பலன்கள் அதியற்புதமாக வளர்ச்சியடையும். 4-ஆமிடம் தாயார் ஸ்தானம், தன் சுகம், பூமி, வீடு, கல்வி, வாகன ஸ்தானம். எனவே அந்த இடத்தை குரு பார்ப்பதால் தாயன்பு பெருகும். புதுமனை யோகம் அமையும். புதிய வாகனம் வாங்கலாம். 6-ஆமிடத்தைப் பார்க்கும் குருவின் பலனாக மேற்கண்ட வீடு, மனை, வாகனம், கல்வி சம்பந்தப்பட்ட வகையில் கடன் வாங்கலாம்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு: படித்து முடித்து வேலையில்லாமல் இருப்போருக்கு, இந்த குருப்பெயர்ச்சி வேலை வாய்ப்பும், வருமான யோகமும் தரும். புதிய தொழில் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். தாராள மான பொருளாதாரமும் இருக்கும்.
பரிகாரம்: மதுரை திருப்பரங்குன்றம் இன்ஜினீயரிங் கல்லூரிப் பாதையில் சிவப்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு: இந்த குருப்பெயர்ச்சி தனநிறைவை யும் மனநிறைவையும் தரும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். தொழில் வளமும் உடல்நலமும், தெய்வபலமும் திருப்தி கரமாக அமையும்.
பரிகாரம்: அருப்புக்கோட்டை அருகில் புலியூரான் சித்த குருநாத சுவாமி சித்தர்கோவில் சென்று வழிபடவும்.
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு: தேக சுகம், சௌக்கியம் உண்டாகும். தாயன்பும், பங்காளிப் பண்பும், சகோதர சகாயமும் எதிர்பார்க்கலாம். பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.
பரிகாரம்: திருவக்கரை சென்று சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் வக்ரகாளியம்மனையும், குண்டலினி முனிவர் ஜீவசமாதியையும் வழிபடவும்.